ஆன்லைனில் பணம் மோசடி செய்தவர்கள் மீது வழக்கு !
200 ரூபாயை ஆன்லைனில் வழங்கிய மர்ம கும்பல் அவரிடம் இருந்து ரூ.13½ லட்சத்தை மோசடி செய்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 08:30 GMT
ஆத்தூரில் ஒரு பெண்ணுக்கு 200 ரூபாயை ஆன்லைனில் வழங்கிய மர்ம கும்பல் அவரிடம் இருந்து ரூ.13½ லட்சத்தை மோசடி செய்தது குறித்து சேலம் சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடைய செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர் ஒருவர் குறுந்தகவல் அனுப்பினார். அதில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த பெண், அதில் குறிப்பிட்டிருந்த வேலையை செய்து முடித்து அதை அந்த நபருக்கு ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினார். உடனே அந்த பெண்ணின் வங்கி கணக்குக்கு 200 ரூபாய் வந்தது. இதையடுத்து மர்ம நபர் அந்த பெண்ணிடம் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். அந்த பெண்ணும் ரூ.13 லட்சத்து 69 ஆயிரத்தை ஆன்லைனில் முதலீடு செய்தார். பின்னர் அவருக்கு எந்த லாப தொகையும் வழங்கப்படவில்லை. இதையடுத்து 200 ரூபாயை வழங்கி விட்டு தன்னிடம் 13½ லட்சம் ரூபாயை மர்ம கும்பல் ஏமாற்றியதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.