ரூ.2.69 கோடியில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி: கடை வாடகை ரூ.625 ஆக நிர்ணயம்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் 82 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில் அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடியில் புயலால் சேதமடையாத வகையில் சென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை வெளியேற்ற சுத்திகரிப்பு நிலையம், குப்பையை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள், வழிகாட்டு பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட் கட்டமைப்புக்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால், வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள கடைகள் ஒவ்வொன்றும் 25 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு சதுர அடிக்கு மாத வாடகை ரூ.25 என ஒரு கடைக்கு ரூ.625 நிர்ணயித்துள்ளது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.