38 ஆண்டுகள் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊரக வளர்ச்சித் துறையினரால் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது
சுமார் 5 மணி நேரம் லாவகமாக உடைத்து பத்திரமாக அந்த தொட்டியை இடித்து தள்ளினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில், பிரம்மதேசம் செல்லும் சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி செயல்பட்டு வந்தது. கடந்த 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி நாளடைவில் பழுதடைந்ததை தொடர்ந்து, இதுக்கு மாற்றாக வேறு சில இடங்களில் இரண்டு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுவிட்ட நிலையில், இதே இடத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சும்மார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பொது மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு மிகுந்த பாதுகாப்புடன் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த நீர்நிலை தேக்கப்பட்டி உடைக்கும் ஊழியர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் பில்லர் தூண்களை சுமார் 5 மணி நேரம் லாவகமாக உடைத்து பத்திரமாக அந்த தொட்டியை இடித்து தள்ளினர். பழுதடைந்த பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பாதுகாப்புடன் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனை தொடர்ந்து வருகின்ற சில தினங்களில் இதனை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு உண்டான பணிகள் துவங்கும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.