4 ஆண்டுகளுக்கு பின் மரக்கன்றுகளுக்கு இடையில் ஊடுபயிராக சேனை
சேப்பங்கிழங்கு வளர்க்கலாம் என காவேரி கூக்குரல் கூட்டத்தில் விளக்கம்;
நாகபட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் பனங்காடி ஊராட்சிக்குட்பட்ட சூராமங்கலம் கிராமத்தில், காவேரி கூக்குரல் சார்பில், மரம் சார்ந்த விவசாயம் பற்றிய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நாகை மாவட்ட ஈஷா கள பணியாளர்கள் விஜய், விக்னேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், மண் வகைக்கு ஏற்ற மரங்களைத் தேர்ந்தெடுப்பது, மரம் நடுவதற்கு முன்பான தயாரிப்பு முறைகள், மரங்களை நடுவதற்கான நுட்பங்கள், நல்ல வளர்ச்சிக்கான பராமரிப்பு முறைகள், நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மர விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு, ஊடு பயிர்கள் சாகுபடியின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மரக்கன்று நட்டு 3 முதல் 4 ஆண்டுகள் வரை, சாதாரணமாக எல்லா பயிர்களையும் ஊடு பயிர் செய்யலாம். 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிழல் விரும்பும் பயிர்களான சேனை கிழங்கு, சேப்பங்கிழங்கு, மஞ்சள் சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. காவேரி கூக்குரல் வழிகாட்டுதலின்படி, சமவெளியில் பல விவசாயிகள் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக, மிளகு, ஜாதிக்காய், சர்வ சுகந்தி, லவங்கப்பட்டை மற்றும் அவகோடா ஆகியவை சமவெளியில் நன்றாக வளர்கிறது. அவை குறித்த நுட்பங்கள் அடுத்து நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஈஷா நாற்றுப் பண்ணையில், பல்வேறு வகையான டிம்பர் மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு டிம்பர் மரக்கன்றுகள் ரூ.5 -க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுக்க நிலத்திற்கு நேரடியாக சென்று இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆலோசனை மற்றும் மரக்கன்றுகள் பெற காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 -யை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.