முதல்வர் காலை உணவு திட்டத்தில் 47,303 மாணவ, மாணவியர் பயன்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 667 பள்ளிகளில் பயிலும் 47 ஆயிரத்து 303 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Update: 2024-07-01 02:06 GMT
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை ரவா உப்புமா, செவ்வாய்கிழமை காய்கறி சேமியா கிச்சடி, புதன்கிழமை வெண் பொங்கல், வியாழக்கிழமை அரிசி உப்புமா, வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடியும், அனைத்து நாட்களும் காய்கறியுடன் கூடிய சாம்பாரும் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 14 பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் 609, பேரூராட்சி பகுதிகளில் 29, நகராட்சி பகுதிகளில் 15 என 653 அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தமாக 667 அரசு பள்ளிகளில் பயிலும் 47 ஆயிரத்து 303 மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.