முடி திருத்தக உரிமையாளர் மீது தாக்குதல் - கடைகள் அடைப்பு... 

பேராவூரணியில் முடி திருத்தக உரிமையாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100க்கும் மேற்பட்ட முடி திருத்தகங்களை அடைத்து முடி திருத்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-30 07:18 GMT

புகார் அளிக்க வந்தவர்கள் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பட்டுக்கோட்டை சாலையில் ப்ளூ மவுண்டன் என்ற முடி திருத்தும் நிலையம் உள்ளது. கடையில் உரிமையாளர் கே.எம்.ராஜா வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்து கொண்டிருந்தார். மேலும் இரண்டு வாடிக்கையாளர்கள் காத்திருந்துள்ளனர்.  அப்போது அங்கு வந்த பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 45) என்பவர் தனக்கு அவசரமாக முடி திருத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் போது உடனடியாக வேலை செய்ய முடியாது. சற்று காத்திருக்குமாறு ராஜா கூறியுள்ளார்.  இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் கோவிந்தன், கடை உரிமையாளர் ராஜாவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.  முடி திருத்தக சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.எம்.ராஜா, இது குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பேராவூரணி, பூக்கொல்லை, குருவிக்கரம்பை, பத்துக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், ரெண்டாம்புலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தகங்கள் உடனடியாக அடைக்கப்பட்டன. 

மேலும், பேராவூரணி வட்டார மருத்துவர் சங்க காப்பாளர் செ.மதிவாணன் தலைமையில், தலைவர் ஆர்.வி.முத்துக்குமார், செயலாளர் வேலாயுதம், பொருளாளர் ஆர்.நாகேந்திர குமார், கௌரவத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, பேராவூரணி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  கடை உரிமையாளர் தாக்கப்பட்டதால் பேராவூரணி பகுதியில் உள்ள முடி திருத்தகம் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். தாக்கியவரை கைது செய்யும் வரை கடைகளை திறக்கப்போவதில்லை என வட்டார மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News