பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டார்
Update: 2024-06-15 06:13 GMT
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்ரமணியன் வரவேற்றார்.செஞ்சி சார்பு நீதிபதி இளவரசி, நீதித்துறை நடுவர் மனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், 'குழந்தைகள், பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தும், குற்றம் குறையவில்லை. 1 லட்சத்து 60 போக்சோ வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு சிறு வயதில் ஏற்படும் பாலியல் பாதிப்பு, வாழ்க்கை முழுதும் ஆறாத காயமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களால் ஏற்படும் பாலியல் குற்றம் பதிவாவதில்லை.தவறான தொடுதல், பாலியல் சீண்டல் குறித்து மாணவிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் உதவி புரியவேண்டும். மழலை செல்வங்களை கசக்கி பிழிபவர்கள் மனிதர்களே இல்லை' என்றார்.தலைமையாசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.