திமுக கூட்டணி வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு !
நாமக்கல் நாடாளுமன்ற திமுக., கூட்டணி வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்ற திமுக., கூட்டணி வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பொதுமக்களிடம் நடனம் ஆடுவது, பரோட்டா சுடுவது, டீ போடுவது என நூதன முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த வி.எஸ். மாதேஸ்வரன், கோழி பண்ணைகளில் தொழிலாளர்களோடு இணைந்து தனது கைபட முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர், தொழிலாளர்களிடம் நோட்டிஸ் வழங்கி தனது உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர்களுடன், தமிழக வனத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., செயலாளர் எம்பி KRN.ராஜேஷ்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய திமுக., செயலாளர் RM.துரைசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., செயலாளர் எம்பி KRN.ராஜேஷ்குமார் பேட்டியளித்தார். அதில், நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் 7.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.
முட்டை உற்பத்தி, கோழி இறைச்சி உள்ளிட்ட பணிகளில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய தேர்தல் அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற்றுமதிக்கு ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என கூறியிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், கோழிகளை விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அப்போது, வரக்கூடாது என நேரமில்லா நேரத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு அமைச்சர் ரூபாலா, கோழிகள் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை அளித்தார். கோழிகள் பாதுகாப்பான முறையில், சத்தான, கலப்படம் இல்லாமல் வளர்க்கப்பட்டு வருகிறது என்றார்.