நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கில் மோசடி! நிதி நிறுவன அதிபர் தலைமறைவு!
பணம் கட்டி ஏமாந்த 100 க்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் புகார் மனு.
நாமக்கல் மாவட்டம் பரளியை அடுத்த கங்காணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னு வேலப்பன். இவர் நாமக்கல் நகரில் சந்தைப் பேட்டை புதூரில் பாலாஜி என்ற பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் நாமக்கல் மோகனூர் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். அந்த பணத்திற்கு 100 க்கு ஒன்றேகால் ரூபாய் வட்டி தந்துள்ளார் நிதி நிறுவன அதிபர். இதனை நம்பி பலரும் இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்து உள்ளனர். ஆரம்பத்தில் பணம் கட்டியவர்களுக்கு முறையாக வட்டி தொகை தந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. நிதி நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் சுமார் 100 க்கு மேற்பட்டோர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தை நம்பி ஏராளமானோர் பணம் கட்டியுள்ளதாகவும், கோடி கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும், அந்த பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டார் எனவும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.