மது விலக்கை அமல்படுத்தினால் அரசுக்கு லாபம் - திருநாவுக்கரசர்

தமிழ்நாட்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் தரும் மதுவை படிப்படியாக தடை செய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், ரூ.45 லட்சம் கோடி அளவிற்கு மருத்துவ செலவு குறையும்; சில இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததை மட்டும் வைத்து பாஜக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Update: 2024-06-26 02:20 GMT

திருநாவுக்கரசர் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சுவாமி கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் (26ம்தேதி) நடைபெற உள்ள தனது 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  சிறப்பு தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா தவறா என்று விமர்சிப்பது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

அந்த இடத்தில் தொடர்ச்சியாக சாராயம் காய்ச்சியது போலீசாருக்கு தெரியாமல் நடந்திருக்காது. இனி வரும் காலங்களில் அங்கு போலீசார் ரெகுலர் சோதனையில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு மது விற்பனை மூலமாக ரூ 45 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. ஆனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் ரூ.4,50,000 கோடி மருத்துவ செலவு தமிழ்நாடு அரசுக்கு குறையும். கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும்.

இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான்.  மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓபிஎஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பாமக உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பாஜக வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது என்றார்.

Tags:    

Similar News