டாஸ்மார்க் கடையை மூட அரசு உத்தரவு - பொதுமக்கள் கொண்டாட்டம்
நல்லம்பாக்கம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடைமூட அரசு உத்தரவின்படி மூடபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், வேங்கடமங்கலம் செல்லும் சாலையோரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில், அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவியரிடம் மற்றும் பணி முடிந்து செல்லும் பெண்களிடமும், போதையில் கலாட்டா செய்து வந்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள், வணிகர்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என, அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். மேலும், அங்கிருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அந்த டாஸ்மாக் கடையை, நேற்று முன்தினம் முதல் நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு, மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.