வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்வு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஜமாபந்தி நிகழ்ச்சியின் 3-ஆம் நாளில் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் 47மனு பெற்றார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கும் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் 3-ஆம் நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,பொது மக்களிடம் மனு பெற்றார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ரயத்துவாரி, இனாம், மைனர் இனாம் (அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டவை உட்பட) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்டம் முழுவதும் 11.06.2024 தொடங்கி 26.06.2024 வரை நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், வருவாய்த் தீர்வாய அலுவலராக பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். கரியாப்பட்டினம் வட்டம் துளசாபுரம், உம்பளச்சேரி,
மகாராஜபுரம் மேற்கு, மகாராஜபுரம் கிழக்கு, அண்டகத்துறை, வேதாரண்யபுரம், பிராந்தியங்கரை ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 47 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் மனுக்களை உடனடியாக பரிசீலித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.