தஞ்சையில் மார்ச்.2 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
தஞ்சாவூரில் நாளை சனிக்கிழமை மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, மார்ச்.2 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலை பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, வேலைவாய்ப்பு துறை, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ்வாதார இயக்கம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகளை ஓருங்கிணைத்து முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளி நபர்கள் மட்டும் ஆதார் அட்டை நகல் , குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-5 ஆகிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இதுவரை யுடிஐடி அட்டை பெறாதவர்கள் விண்ணப்பம் செய்திடுமாறும், உதவி உபகரணங்கள், வங்கி கடன் மற்றும் இதர துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் தேவைப்படுவோர், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடர்பான
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.