தூத்துக்குடியில் ரயில்வே பராமரிப்பு பணியில் பயன்படுத்திய கழிவுகளுக்கு தீவைத்தால் நகர் முழுவதும் கரும் புகை மூட்டம் பரவியது.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் மற்றும் 2ஆம் ரயில்வே கேட் ஆகியவற்றுக்கு இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் எஞ்சிய குப்பைகளுக்கு ஊழியர்கள் சிலா் தீவைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கழிவுகளில் மரக்கட்டைகள், காப்பா் வயா் கழிவுகள், பிளாஸ்டிக் ஆகியவை இருந்ததால், தீ மள மளவென பரவி வேகமாக எரியத் தொடங்கியது. இதன் காரணமாக கரும்புகை எழுந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தூத்துக்குடி நகரில் பெரிய தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. புகை மூட்டத்தால் பொதுமக்கள் முச்சுத்தினறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. தீ பரவிய நேரத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்றது. தீப்பொறி காற்றில் பரவினால் ரயிலில் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இதுபோன்று அஜாக்கிரதையாக பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.