மல்லசமுத்திரத்தில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாத்துடன் அருகிலுள்ள மங்களம் கிராமத்தினை இணைத்து, இரண்டாம்நிலை நகராட்சியாக மாற்ற அரசு கருத்துகேட்பு நடத்திவருகின்றது. அவ்வாறு மங்களம் ஊராட்சியை மல்லசமுத்திரம் நகராட்சியுடன் இணைத்தால் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிவிடும். தண்ணீர்வரி 3மடங்கு அதிகரிக்கும். கிராம ஊராட்சிக்கு மத்தியஅரசு அளிக்கும் மானியம் தடைபடும். மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்காமல் அதிகாரிகளைதேடி அலைய வேண்டிவரும். சொத்துவரி, தொழில்வரி பலமடங்கு உயரும். மங்களம் கிராமத்தில் 100நாள் வேலையையும், விவசாயத்தையும் நம்பியுள்ள மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆகவே, மங்களம் ஊராட்சியை மல்லசமுத்திரம் இரண்டாம்நிலை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம். அரசு இத்திட்டத்தினை விரைந்து கைவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, ஊராட்சிமன்ற தலைவர் குப்பாயிமாரிமுத்து தலைமையில் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. சேர்மன் அலமேலுவிஜயன், அ.தி.மு.க.,கவுன்சிலர் வனிதாராஜன், அ.தி.மு.க.,நகரசெயலாளர் சுந்தரராஜன் உள்பட 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அரசு கோரிக்கைக்கு செவிசாய்காத பட்சத்தில் தொடர்ந்து மங்களம் பகுதிமக்கள் சார்பாக, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து பி.டி.ஓ.,பாலவிநாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.