அதிமுக வேட்பாளர் மனு ஏற்க கூடாது என ஆட்சேபனை !
அதிமுக வேட்பாளர் கருப்பையா மீது கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு உள்ளாரா? என்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-28 09:20 GMT
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. இதில் 40 வேட்பாளர்களின் 48 மனு மீது விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ, அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் செந்தில்நாதன் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொழுது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தை சேர்ந்த தலைவர் பொன்.முருகேசன், அதிமுக வேட்பாளர் கருப்பையா மீது கறம்பக்குடியில் கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அதனை குறிப்பிட்டு உள்ளாரா? என்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பதிலளித்தார். பின்னர் பொன்.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ;கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட வேட்பாளர் களத்தில் உள்ளார். பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சேபனை தெரிவித்த பொழுது அவர் கொலை வழக்கு கொலை சம்பவத்தில் தன் மீது வழக்கு பதிவு உள்ளதை மனுவில் குறிப்பிடவில்லை என்றால் மனுவை ஏற்க கூடாது என தெரிவித்தார். இதனால் வேட்பு மனு பரிசீலனையின் பொழுது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.