முத்தியால்பேட்டையில் விளையாட்டு உபகரணங்கள் பழுது:சீரமைக்க வலியுறுத்தல்
முத்தியால்பேட்டை அம்மா விளையாட்டு பூங்காவில் பழுதடைந்த உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில், 2018ல், 30 லட்சம் ரூபாய் செலவில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இதில், நடைபயிற்சிக்கான நடைபாதை, சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள்,
இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், ஓய்வெடுக்க இருக்கை வசதி, இரவில் ஒளிரும் மின்விளக்கு, அழகிய பூச்செடிகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பூங்காவை தாட்டித்தோப்பு, முத்தியால்பேட்டை, ஏரிவாய், படப்பம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியினர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீசா உள்ளிட்ட உபகரணங்களும், இருக்கைகளும் உடைந்துள்ளன. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களும் பழுதடைந்துள்ளதால் அவை பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.
கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளது. எனவே, அம்மா விளையாட்டு பூங்காவில் பழுதடைந்த உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முத்தியால்பேட்டை ஊராட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.