திருத்தணி-கோயம்பேடு தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
திருத்தணி-கோயம்பேடு தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சென்னை, கோயம்பேடிற்கு மொத்தம், 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, திருத்தணி முருகன் கோவில் உள்ளதால், சென்னையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர்.
இதுதவிர, வியாபாரிகள் மற்றும் நகரவாசிகள் தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக, திருத்தணியில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மாலை நேரத்தில் திருத்தணி -- சென்னை கோயம்பேடுக்கு நேரிடையாக பேருந்து வசதியில்லை. குறிப்பாக, மாலை 5:20 மணிக்கு, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை கோயம்பேடுக்கு, தடம் எண்: 97 என்ற பேருந்து செல்கிறது.
இதையடுத்து, இரவு 9:25 மணிக்கு தான், திருத்தணியில் இருந்து கோயம்பேடுக்கு நேரிடையாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால், கோயம்பேடுக்கு நேரிடையாக செல்லும் பயணியர், நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சென்னை, கோயம்பேடுக்கு நேரிடையாக செல்வதற்கு அதிகளவில் பயணியர் இருப்பதில்லை. 'அப்படி இருந்தாலும் திருத்தணி -- திருவள்ளூர் இடையே ஆறு பேருந்துகள் அந்த நேரத்தில் இயக்கப்படுகின்றன.
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாநகர பேருந்துகள் அதிகளவில் செல்வதால், பயணியருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை' என்றார்.