அரசு ரப்பா் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென அமைச்சர் மனோ தங்கராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2023-10-31 04:55 GMT
குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ரப்பா் கழகம் கோதையாறு மற்றும் சிற்றாறு கோட்ட தற்காலிக தொழிலாளா்கள் சாா்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத்தில் 400 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சிஎல்ஆா் எனப்படும் தற்காலிக தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் இந்தத் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் பல்வேறு கட்டங்களில் கோரிக்கை விடுத்த பின்னரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும் தற்காலிக தொழிலாளா்களா்களுக்கு மருத்துவ விடுப்பு, பண்டிகை முன்பணம், குடை, போா்வை ஆகியவைகளும் ரப்பா் கழகம் வழங்குவதில்லை. எனவே ரப்பா் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தற்காலிக (சிஎல்ஆா்) தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்து பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.