அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறுவிற்பனை
முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறுவிற்பனை நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக பலவிதமான காணிக்கைகளை செலுத்துகின்றார்கள். குறிப்பாக குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் வாங்கி வைப்பது மற்றும் அம்மனுக்கு பட்டு சேலைகள் காணிக்கையாக வழங்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு வழங்குகின்ற பட்டுச் சேலைகளை அம்மனுக்கு அணிவிக்க வேண்டி மனதார வேண்டி வழங்குகின்றனர்.
இந்த வகையில் ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சேலைகள் குவிவது வழக்கம். இவ்வாறு காணிக்கையாக வழங்குகின்ற சேலைகளில் பெரும்பாலானவை அதிக விலை மதிப்புள்ள பட்டுப் புடவைகளாக இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இது போன்ற பெருட்களை சிறிதளவு விலை நிர்ணயம் செய்து பொது ஏலம் விடப்படுவது வழக்கம்.
ஆனால் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஏலம் விடுவதற்கு மாறாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் சேலைகள் கோயில் வளாகத்திலேயே ஜவுளிக்கடை போல் தொங்கவிட்டு மறு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பையும் அப்பகுதியில் ஒட்டி வைத்துள்ளனர். அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்ற சேலைகளை பக்தர்கள் கண் முன்னாலே அம்மனுக்கு அணிவிக்காமல் விற்பனை கூடத்தில் தொங்கவிட்டு மறு விற்பனை செய்வது பக்தர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.