கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மயில் மீட்பு

பேராவூரணி அருகே 90 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மயிலை மீட்ட தீயணைப்பு படையினர்.

Update: 2024-05-27 15:04 GMT

மயில் உயிருடன் மீட்பு 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து, உயிருக்கு போராடிய மயிலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.  பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆவிடைக்குட்டித் தேவர். விவசாயியான இவர் தனது வயலுக்கு சென்ற போது, அவருடைய தண்ணீர் இல்லாத,

பாழடைந்த கிணற்றில் இருந்து மயில் அகவும் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தார். அப்போது, 90 அடி ஆழக் கிணற்றுக்குள் பெண் மயில் தவறி விழுந்து, மேலே பறந்து வரமுடியாமல் அலறிக் கொண்டிருந்தது. 

உடனடியாக ஆவிடைக்குட்டி தேவர் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் வீ. சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரர்கள்  சா.நீலகண்டன், அ.சுப்பையா, க.ஆகாஷ் கண்ணன்,  ர.நிரஞ்சன், ச.வெங்கடேசன் ஆகியோர் பின்னவாசல் கிராமத்திற்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் பாதுகாப்பாக கயிறு கட்டி இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.  மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகும். மயிலை வேட்டையாடவோ, வீடுகளில் வளர்க்கவோ அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பேராவூரணி பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த மயில் அங்குள்ள வயல்கள், தோட்டங்களில் விளையும் பொருட்களை தின்று உயிர் வாழ்ந்து வருகிறது.  இந்நிலையில் உயிருக்கு போராடிய மயிலை மீட்டு உயிருடன் வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினருக்கு இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News