திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இன்று (21.10.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப., முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா களஆய்வுகள் மேற்கொண்டார்.
அதில், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட முத்தணங்கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், கல்லல் ஊராட்சி ஒன்றியம், செம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிட மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமானப்பணிகள் தொடர்பாகவும், அதனைத்தொடர்ந்து, தேவகோட்டை நகராட்சி பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்