வீட்டுமனைக்கு இடம் காண்பித்த வருவாய்த்துறையினர்
போராட்டம் அறிவித்ததால் வீட்டுமனை இடம் காண்பித்த வருவாய்த் துறையினர்
By : King 24x7 Website
Update: 2023-12-12 10:37 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை இடம் கேட்டு போராட்டம் அறிவித்ததால் வருவாய்த்துறையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைக்கான இரண்டு இடத்தை காண்பித்தனர் இது குறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது: குமாரபாளையம் தாலுக்கா பகுதியில் உள்ள மாற்றுத்திறனுடையோர்களுக்கு இலவச வீட்டுமனை கேட்டு ஏழு ஆண்டுகளாக பல மனுக்கள், பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். எங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால், நேற்று மாற்றுத்திறனுடையோர், குமாரபாளையம் சரவணா தியேட்டர் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ததாக போராட்டம் அறிவித்தோம். இதனை அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் இரண்டு இடங்களை காண்பித்தார்கள். பயனாளிகள் 54 பேர் இருப்பதால், கலந்து ஆலோசித்து சொல்வதாக கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். சரவணா தியேட்டர் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வீட்டுமனைக்கான இடங்கள் இவர்களுக்கு கான்பிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டு, அதே இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட பல பொருட்கள், யூ.டி. அடையாள அட்டை ஆகியன வழங்கப்பட்டன. எஸ்.ஐ. தங்கவடிவேல் இதனை பயனாளிகளுக்கு வழங்கினார். வி.ஏ.ஒ. ஜனார்த்தனன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.