பைனான்சியரின் காரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 லட்சம் கொள்ளை
சிப்காட் அருகே காரை மடக்கி பைனான்சியரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரைச் சேர்ந்தவர் சரவணன் (45), பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சித்தூரில் இருந்து பொன்னை அடுத்த கத்தாரி குப்பம் வழியாக காரில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது காரில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சித்தூரில் இருந்து பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்ததாக கூறப்படுகிறது. கத்தாரி குப்பம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் சரவணனின் காரை மடக்கி உள்ளனர். மேலும், சரவணனை மிரட்டி அவரிடம் இருந்த 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, மர்ம நபர்கள் தப்பிச்சென்ற கார் சிறிது தூரத்தில் வயலின் ஓரமாக நின்றிருந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.