பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை - வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
மதகுபட்டியை அடுத்துள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 52). இவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி ராஜேஸ்வரியை மிரட்டினார். மேலும் அவரை கயிற்றில் கட்டி போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தார். அப்போது ராஜேஸ்வரி அது கவரிங் செயின் எனக்கூறவே ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கையால் தாக்கியுள்ளார்.மேலும் வீட்டில் இருந்த ரூபாய் 1000 பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ராஜேஸ்வரி திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை மதகுபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் பகுதியை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.