திராவிடவியல் வளர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் பங்களிப்பு
திராவிடவியலின் வளர்ச்சிக்கு இராபர்ட் கால்டுவெல்லின் பங்களிப்பு குறித்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசால், தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள, தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கையில், இராபர்ட் கால்டுவெல்லின் மொழியியல் பணிகளைப் போற்றும் வகையில் திராவிடவியலின் வளர்ச்சிக்கு இராபர்ட் கால்டுவெல்லின் பங்களிப்பு எனும் தேசிய கருத்தரங்கம் தொடக்கவிழா துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவர் பேசுகையில், "திராவிடவியலின் தந்தை என்று போற்றப்படும் கால்டுவெல் 12 மொழிகளை மட்டுமே ஆய்வுசெய்து ஒப்பிலக்கணமாக 1856இல் வெளியிட்டுள்ளார் இன்றைய நிலையில் 30க்கும் மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளப் படுத்தப்படுகின்றன. எனவே திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்கு முன் கால்டுவெல்லுக்கு பின் என ஆய்வு செய்யவேண்டும்" என்றார். மேலும், இக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கி.கருணாகரன், மேனாள் பதிவாளர் கி. அரங்கன், தற்போதைய பதிவாளர் சி.தியாகராசன், மொழிப்புல முதன்மையர் ச.கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்கில் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத்தகைஞர் ந.நடராசப்பிள்ளை நோக்கவுரை ஆற்றினார்.
இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனம் மைசூரிலிருந்து சாம்மோகன்லால், ராமமூர்த்தி, பாலகுமார், சுந்தரராஜன், சுரேஷ், திராவிடப்பல்கலைக்கழகம் குப்பம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொண்டு கட்டுரை வாசித்தனர். மேலும் முதுநிலை ஆய்வுத்தகைஞர் ம.சிவசண்முகம், மேனாள் பேரவை உறுப்பினர் பசும்பொன், மக்கள் தகவல்தொடர்பு அதிகாரி முருகன் மற்றும் மொழியியல் அறிஞர்கள், ஆய்வாளர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கை முனைவர் கி.பெருமாள் தொகுத்து வழங்கினார். மொழியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ப.மங்கையற்கரசி வரவேற்றார். நிறைவாக முனைவர் மா.ரமேஷ்குமார் நன்றி கூறினார்.