கடலரிப்பை தடுக்க நேர்கல் தடுப்பு
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியில், மீனவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கடற்கரையில், நீண்டகாலமாக கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கடற்கரை மணற்பரப்பு அழிந்து, மீன்பிடி படகுகள், வலைகளை பாதுகாக்க இயலவில்லை. கடல் அரிப்பை தடுக்க, கல் தடுப்பு அமைக்க வேண்டும் என, இப்பகுதி மீனவர்கள் அரசிடம் வலியுறுத்தினர்.
நேர்கல் தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்க, 9.62 கோடி ரூபாய் ஒதுக்கி, மீன்வளத்துறை சார்பில் தனியாரிடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. பாறை கற்கள் கிடைப்பது தாமதமான நிலையில், முதலில் மீன் இறங்குதள கட்டடம் கட்டப்பட்டது. கடலரிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், தற்போதைய அரிப்பில் இடியும் அபாயம் ஏற்பட்டது.
அதனால், நேர்கல் தடுப்பை விரைந்து அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது, பாறை கற்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது