மாடத்தட்டுவிளையில் ஜெபமாலை பவனி - திரளானோர் பங்கேற்பு
குழித்துறை மறைமாவட்டம் மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மரியன்னை மாநாடு வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையில் நேற்று நடந்தது.
Update: 2023-10-29 05:13 GMT
மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த மாநாட்டிற்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை வகித்தார். மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குப்பணியாளர் அருட்பணி ஜெயக்குமார், முளகுமூடு கொமித்சியம் ஆன்ம இயக்குநர் அருட்பணி சகாயதாஸ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். பருத்தியறைத்தோட்டம் பிரசிடியம் தமிழரசி இறைவேண்டல் செய்தார். கருத்தமர்வு, கருத்துரை, கேள்வி அரங்கம் தொடர்ந்து மதிய உணவு ஆகியவை நடந்தது. தொடர்ந்து மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஜெபமாலை பவனி நடந்தது. ஜெபமாலை பவனியை பங்கு அருட்பணியாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஜெபமாலை பவனி பண்டாரக்காடு அந்தோணியார் குருசடி, கூட்டுவிளை வழியாக வில்லுக்குறி மெயின் ரோடு செபஸ்தியார் குருசடி, அந்திச்சந்தை குருசடி வந்து கான்வென்ட் சாலை வழியாக மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் மறையுரை, நிறைவுறை, நற்கருணை ஆசீர், மாநாட்டு மலர் வெளியீடு ஆகியவை நடந்தது. பவனியில் மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ஸ்டெல்லா ராணி, இணை செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ், முளகுமூடு கொமித்சியம் தலைவர் எட்வர்ட் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.