அஞ்சலகங்களில் தங்க முதலீட்டு பத்திரங்கள் விற்பனை
Update: 2023-12-20 11:44 GMT
அஞ்சலகங்களில் தங்க முதலீட்டு பத்திரங்கள் விற்பனை தர்மபுரி, டிச.20: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தங்கம் மீதான முதலீட்டு பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தர்மபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் 30 துணை அஞ்சலகங்களிலும் தங்கம் மீதான முதலீட்டு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4000 கிராம் வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். எட்டு ஆண்டுகள் இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில், தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கபத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவிதம் வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கபடும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இந்தத் திட்டம் டிச.18-ஆம் தேதி முதல் டிச.22 வரை தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும். அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவருக்கு, அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 15 நாள்களுக்கு பிறகு தங்க பத்திரம் வழங்கப்படும். இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண்,பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு அவசியமாகும். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம். விவரங்களுக்கு 04342-260143, 7200244247 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.