குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை - பீடா கடைக்காரர் கைது
போச்சம்பள்ளி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் 9 விதமான போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த பீடா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் ரபீயா என்ற பீடா கடையை பழைய போச்சம்பள்ளி மசூதி தெருவை சேர்ந்த அஸ்கர் என்பவரது மகன் கலீம் என்பவர் வைத்து வந்துள்ளார். இவரை சந்தேகித்த போச்சம்பள்ளி போலீசார் கடந்த சில நாட்களாக அவரது கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இவர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து தனது வீடு மற்றும் கடையில் பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் இதனை ஊர்ஜிதப்படுத்திய போச்சம்பள்ளி போலீசார் கலீமின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாரின் சோதனையில் கலீமின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீஸார் கலீமை கைது செய்தனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் 30 ஆயிரம் ரூபாய் என தெரிய வந்தது.
மேலும் இந்த கலீம் பீகார் மாநிலம் பாட்னா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வந்து போச்சம்பள்ளியில் தங்கி பீடா கடை நடத்தி வந்ததும் மேலும் பீடாக்கடை என்ற பெயரில் போதை பொருட்களை இப்பகுதியில் பெருமளவு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவரின் மீது வழக்கு பதிவு செய்த போச்சம்பள்ளி போலீசார் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். யாருக்கும் தெரியாமல் பீடா கடை என்ற பெயரில் மறைமுகமாக குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த நபரை கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.