புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2பேர் கைது - கடைகளுக்கு சீல்
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் போலீசார் இன்று (27.04.2024) தோப்பு வடக்கு தெருவில் உள்ள தூத்துக்குடி பொன்னான்டி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பசாமி (54) என்பவருக்;கு சொந்தமான மளிகைகடையில் சோதனை செய்தபோது, அங்கு கருப்பசாமி அவரது கடையில் 12 (150 கிராம்) புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோன்று நேற்று போலீசார் முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சாலை பகுதியில் உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகரை சேர்ந்த கோமதிவேல் மகன் முருகன் (50) என்பவருக்கு சொந்தமான மளிகைகடையில் சோதனை செய்தபோது, அங்கு மேற்படி முருகன் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,220 மதிப்புள்ள 4 கிலோ 150 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் நேற்று மேற்படி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 மளிகைகடைகளுக்கும் சீல் வைத்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மளிகை கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனை செய்பவர்கள் கடையை மூடி சீல் வைத்து, அவர்களது வங்கி கணக்கும் முடக்கம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.