சேலம்: கேரளாவுக்கு ரெயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சேலம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-12-10 02:11 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளாவுக்கு ரெயிலில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசாரும், தமிழ்நாடு ரெயில்வே போலீசாரும் இணைந்து தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் சேலம் கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நியூடெல்லி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர சோதனை நடத்தினர். அதில், ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகப்படும்படி 2 பேக்குகளுடன் 2 வாலிபர்கள் பயணம் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோவை ரெயில் நிலையத்தில் இறங்க வைத்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பேக்குகளில் தலா 4 கிலோ வீதம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சிக்கிய 2 பேரிடமும் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் கேரளா மாநிலம் ஆலப்புழா அருகேயுள்ள கார்திகப்பள்ளி முத்துவலம் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் (34), ஷியாஸ் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள்? கேரளாவுக்கு யாரிடம் விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News