சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றம்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2024-05-17 08:19 GMT

கொடியேற்றம் 

சேலம் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு வைகாசி தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை கொடியேற்றத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தன. காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளம் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அழகிரிநாதருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் உற்சவமூர்த்திக்கு பட்டாடை உடுத்தி, தங்க கிரீடங்கள் சாத்தப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்று நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவீதி உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 8 மணிக்கு வெள்ளி பல்லக்கிலும், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் திருவீதி உலா நடக்கிறது. வருகிற 24-ந்தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News