8 லட்ச ரூபாய் வழிப்பறி செய்த கூலிப்படையினர் ஒராண்டிற்கு பின் கைது

தஞ்சாவூரில் வியாபாரியிடம் ரூ. 8 லட்சத்தை வழிப்பறி செய்த கூலிப்படையினர் ஒராண்டிற்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-12-18 15:20 GMT

பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கூலிப்படை நபர்களுக்கு வழங்குவதற்காக, தஞ்சாவூரில் வியாபாரியிடம் பணத்தை வழிப்பறி செய்த இருவரை காவல்துறையினர் ஒராண்டிற்கு பிறகு கைது செய்தனர்.   திருச்சியில் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரியான வெங்கடாசலத்திடம், பெரிய மிளகுபாறையை சேர்ந்த நாகரத்தினம் (65), என்பவர் பணியாற்றினார். சிறு வியாபாரியான இவர் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சில்லறை வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து வருவது வழக்கம். கடந்த 2022 ஆம் ஆண்டு நவ.29 ஆம் தேதி, தஞ்சாவூரில் உள்ள வியாபாரிகளிடம் வசூல் செய்த 8 லட்சம் ரூபாயை, பையில் எடுத்துக் கொண்டு டூ-வீலரில் திருச்சிக்கு சென்ற போது, மர்ம நபர்கள் நாகரத்தினத்திடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து, மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்   ஆனால், ஒராண்டாக மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். இந்நிலையில், புதுக்கோட்டையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளவரசன் என்பவரை கொலை வழக்கில், புதுக்கோட்டை சிறையில் இருந்த தஞ்சாவூர், கரந்தை பகுதியை சேர்ந்த கூலிப்படையில் உள்ள ராஜா என்ற குஜிலி ராஜா (31), என்பவருக்கு, தஞ்சாவூரில் நடந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து புதுக்கோட்டை காவல்துறையினர் உதவியுடன், ராஜாவை தஞ்சாவூர் தனிப்படையினர் கைது செய்து விசாரித்தனர்.   விசாரணையில், இளவரசனை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், கூலிப்படையினருக்கு தேவையான உதவிகளை செய்யப் பணம் இல்லாத நிலையில், தனது நண்பரான தஞ்சாவூர், வடக்கு வாசல், சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த தாமோதரன் என்பவரிடம் ராஜா பணம் கேட்டுள்ளார். அப்போது, தாமோதரன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேம் குமாரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே காய்கறி மார்கெட்டில் பணியாற்றிய பிரேம்குமார் (25),. வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செய்யும் நாகரத்தினத்திடம் வழிப்பறி செய்தால், போதிய பணம் கிடைக்கும் என தாமோதரனிடம், பிரேம்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, தாமோதரன், பிரேம்குமார், ராஜா, திருவாரூரை சேர்ந்த சுரேஷ், மானாமதுரையை சேர்ந்த வசந்த் ஆகியோர், வியாபாரியான நாகரத்தினத்திடம் இருந்து பணத்தை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து  ராஜா மற்றும் பிரேம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், இளவரசனை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மானாமதுரையை சேர்ந்த வசந்த் தற்போது சிறையில் உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள தாமோதரன், சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலையில், ராஜாவிற்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News