தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.39,250 இழப்பீடு வழங்க உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ரூ.39,250 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடியைச் சார்ந்த செந்தில் குமரன் என்பவர் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டிலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது கட்சிக்காரர் அளித்த வங்கி காசோலையை வசூலுக்காக தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் பல முறை நேரில் சென்று வங்கிப் பணியாளர்களிடம் காசோலை வசூல் ஆகி விட்டதா என்று கேட்டுள்ளார். ஆனால் எந்த தகவலும் கூறாமல் வீணாக அலைக்கழித்து உள்ளனர். திடீரென போதிய பணம் இல்லை என்ற காரணத்தினால் காசோலை திரும்பி வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கட்சிக்காரரின் கணக்கில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியினர் உடனடியாக வசூலுக்கு அனுப்பி வைக்காமல் 7 நாட்கள் கழித்து தாமதமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அபராதத் தொகையாக ரூ.250 மனுதாரரின் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த வங்கியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கிகளின் ஆம்புட்ஸ்மேனுக்கும் புகார் அனுப்பியுள்ளார். உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில் குமரன் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காசோலை திரும்பி வந்ததற்காக பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகை ரூ.250 காசோலை தொகைக்கான வட்டித் தொகை ரூ.4,000-ஐ ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் மனுத் தாக்கலான தேதி முதல் செலுத்த வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25,000 வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.39,250-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.