கரூர் மக்களை கண்டால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது - வானதி சீனிவாசன்

கரூர் மக்களை கண்டால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. கோவையில் எனது பெரிய தம்பி அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை கட்டாயம் நாங்க ஜெயிக்க வைத்து விடுவோம். கரூரில் எனது இளைய தம்பி செந்தில் நாதன் போட்டியிடுகிறார். செந்தில் நாதனை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் பேசினார்.

Update: 2024-04-15 02:59 GMT

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ளது. இதனால், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பட்டாளங்கள் நாள்தோறும் கரூரை கலக்கி வருகிறார்கள். இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிஜேபி கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் திரண்டு இருந்து வானதி சீனிவாசன் கூறும் கருத்தை கவனமுடன் கேட்டு நின்றனர். வானதி சீனிவாசன் பேசும் போது, அனைவரும் தாமரைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறி கரூர் காரங்களை பார்த்தா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. பயமாக இருக்கிறது என்றால் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், கோவையில் எனது பெரிய தம்பி அண்ணாமலை போட்டியிடுகிறார்.

அவரை  கட்டாயம் நாங்க ஜெயிக்க வைத்து விடுவோம். கரூரில் எனது இளைய தம்பி செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இதே போல செந்தில் நாதனை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செந்தில்நாதன் ஜெயிக்க வச்சுட்டா என பேசும் போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் இடை மறித்து,ஜெயிக்க வைத்தால் தோடு கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு, தோடு மட்டுமல்ல, தாலி மட்டுமல்ல உங்களுக்கு ஒட்டியானமே செய்து தருகிறோம் என கூறினார். மேலும், ஏழைப் பெண்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு ஜெயலலிதா அம்மா தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்தை ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News