ஏரியில் மண் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

பொன்னேரி அருகே ஏரியில் மண் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-27 17:18 GMT

போராட்டம் 

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரி, 163 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், சுற்றியுள்ள கிராமங்களான தடப்பெரும்பாக்கம், வடக்குப்பட்டு, கொடூர் ஆகிய கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

மழைக்காலங்களில் ஏரியில் மழைநீர் தேங்குவதன் வாயிலாக விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பின்றி செயல்படுகிறது. நிலத்தடி நீரும் உவர்ப்பு இல்லாததால், குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகத்தால் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, காட்டுப்பள்ளி - -மாமல்லபுரம் இடையே, 133 கி.மீ., தொலைவிற்கு அமையும் சென்னை எல்லை சாலை திட்டப்பணிகளுக்காக, தடப்பெரும்பாக்கம் ஏரியில் மண் அள்ளப்பட்டது. அப்போதே அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்தில் மண் அள்ளியதாக புகார் எழுந்து, குவாரி மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே ஏரியில், அதே சாலைப்பணிகளுக்காக, சவுடுமண் குவாரி விடப்பட்டு உள்ளது.

இதையறிந்த தடப்பெரும்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண் ஏற்றிவந்த லாரிகளை மறித்தனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார்.

குவாரியில் மண் எடுக்க அரசு அனுமதி பெற்று உள்ளதாகவும், அரசு விதிமுறைகளை பின்பற்றி குவாரி செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News