ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ரயில்வே பாலம்
ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ரயில்வே பாலத்தை விரைந்து முடிக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட சுபாஷ் நகர் பகுதியில் உள்ள ரயில்வே பாலம் இரட்டை ரயில் பாதை பணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. பின்னர் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பணி பாதியிலேயே நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழைய பாலம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் குமாரபுரம் உள்ளிட்ட சில ஊர்களை சேர்ந்த மக்கள் ஆறு கிலோமீட்டர் தூரம் வாகனங்களில் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பணி மீண்டும் தொடங்கவே இல்லை. இந்நிலையில் தற்போது யாராவது இறந்தால் கூட அடக்கம் செய்வதற்காக எம் ஜி ஆர் நகரில் இருந்து சுபாஷ் நகர் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால்,
இறந்தவர்கள் உடலை தண்டவாளத்தின் வழியாக கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆபத்தான நிலையை தவிர்க்க பாலப்பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.