மயிலாடுதுறையில் பயிற்சி தேர்வுக்கு வந்த மாணவர்கள் தவிப்பு

மயிலாடுதுறையைில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் தேர்வுக்கு முன்கூட்டியே வந்த வெளிமாவட்ட மாணவர்களை விளையாட்டு மைதானத்தில் தங்க அனுமதிக்காததால் கோயில் வாசலில் படுத்து உறங்கினர்.

Update: 2024-02-05 09:25 GMT

மாணவர்கள்

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ்காந்தி சிறப்பு விளையாட்டு சரக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு 2024-2025-ம் ஆண்டிற்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு இன்று 5ம்தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இம்மையத்தில் 10 வயதிலிருந்து 16 வயது வரை உள்ள இருபாலாருக்குமான தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், பெண்களுக்கு மட்டுமான கூடைப்பந்து, 10 வயதிலிருந்து 16 வயது வரை இருபாலருக்கான கபாடி, ஆண்களுக்கான கைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான வீரர் வீராங்கனைகள், தேர்வு நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 16 வயதுவரை பயிற்சியும் அவர்கள் படைக்கும் சாதனைக்கேற்ப தொடர் பயிற்சியும் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேருபவர்களுக்கான படிப்பு செலவு, உணவு, இருப்பிடம், விளையாட்டு உபகரணங்கள், விபத்துக்காப்பீடு என பல சலுகைகள் மத்திய அரசு மூலம் அளிக்கப்படுகிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள இன்று 5ம்தேதி காலை 8 மணிக்கு மைதானத்தில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடலூர், அரியலூர்; விழுப்புரம், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மயிலாடுதுறைக்கு 4ம்தேதி இரவு வந்துள்ளனர்.

விளையாட்டு மைதானத்தில் தங்கி கொள்ளலாம் என்று வந்த மாணவர்களுக்கு அங்கு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் வேறு வழியின்றி மாயூரநாதர் ஆலயம் அருகே உள்ள ஆஞ்சநேயர் ஆலய வாயிலில் குளிரில் நடுங்கியவாறு படுத்து உறங்கினர்.

இதனைப்பார்த்த அந்த பகுதி அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சதீஸ் என்பவர் கோயில் வாசலில் படுத்திருந்த பன்ரூட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்களை அதிமுக நகரகழக அலுவலகத்தில் தங்க வைத்துள்ளார். விடுதியில் தங்கும் அளவிற்கு கையில் பணம் இல்லாததால் கோயில் வாசலில் படுத்திருப்பதாகவும் தேர்வுக்கு வந்த மாணவர்கள்’ தெரிவித்தனர்.

விளையாட்டு துறையில் ஏழை எளிய மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் மத்திய அரசு நிர்வாகம் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News