அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பறந்து மகிழ்ச்சி !
செங்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் லீவு போடாமல் வந்த மாணவர்கள் விமானத்தில் பறந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 06:39 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின் தங்கிய மாணவர்களே பெரும்பாலானோர் இந்த பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் வரும் மாணவ மாணவிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக விடுமுறை எடுக்காமல் வந்த ஒன்பது மாணவ மாணவிகளை பெற்றோர் அனுமதியுடன், சென்னையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் அழைத்துச் சென்று மாணவ மாணவிகளுக்கு இன்ப பரிசினை ஆசிரியர்கள் வழங்கினர். அருகில் இருக்கும் சென்னைக்கு கூட சென்றிராத பல மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று அழகு பார்த்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் தற்பொழுது நடைபெற இருக்கின்ற மாணவர்கள் சேர்க்கையில் அதிக மாணவர்கள் பள்ளியில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களும் இக்காலத்தில் தேவையில்லாமல் இருக்கும் விடுமுறைகளை எடுக்காமல் ஒழுக்கமாக பள்ளிக்கு வருவார்கள் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னலமற்ற செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.