இறைச்சிக்காக சிறுவன் பிடித்து வந்த ஆமைகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே இறைச்சிக்காக சிறுவனால் பிடித்து வரப்பட்ட 33 ஆமைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் சிறுவனை இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-02-21 01:53 GMT

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் 

விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் பானாம்பட்டு சாலை பிரியும் பகுதி வழியாக இறைச்சிக்காக ஆமைகளை சிலர் கடத்தி செல்வதாக நேற்று வனத்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் கண்டாச்சிபுரம் பிரிவு வனவர் சுகுமார், வனக்காப்பா ளர்கள் சுப்பிரமணியன், இளையராஜா, கார்த்திகேயன், சுபஸ்ரீ ஆகி யோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வனத்துறையினர், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த சாக்குப்பையை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில் 33 ஆமைகள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நபரை விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிந்தது,

மேலும் விழுப்புரம் பகுதியில் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் 5 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களில் தங்கியிருந்து பூம்பூம் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருவதும், இவர்களில் 17 வயதுடைய சிறுவன், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள நீர்நிலையில் இருந்து 33 ஆமைகளை பிடித்து அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு சமைத்து சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அச்சிறுவனை, விழுப்புரம் இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது பிடிபட்ட ஆமைகள் இந்திய நன்னீர் ஆமைகள் (பிலேப்ஷெல்) வகையை சார்ந்தது. இந்தவகை ஆமைகள் இறைச்சி மற்றும் ஓடுகளுக்காக அதிகளவில் கடத்தப்படுகின்றன. இந்த இன ஆமைகள், ஆறுகளில் உள்ள இறந்த விலங்குகளின் பாகங்களை உண்பதால் இவை ஆறுகளை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன.

1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின்படி அட்டவணை படுத்தப்பட்ட வன விலங்கான அட்டவணை பகுதி 1-ல் உள்ள இந்திய நன்னீர் ஆமைகளை உணவிற்காகவோ, வணிக ரீதியாகவோ பிடித்தல், கடத்தல் மற்றும் கொல்லுதல் போன்றவை சட்டப்படி குற்றமாகும். இதன் அடிப்படையில் இறைச்சிக்காக ஆமைகளை பிடித்து வந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் அனைத்தும் மீண்டும் நீர்நிலைகளில் கொண்டு சென்று விடப்படும் என்றனர்.

Tags:    

Similar News