சமூக வலைதளத்தில் உதவிக்கோரிய இளைஞர்: நேரில் சென்று உதவிய நகர்மன்ற தலைவர்
சமூக வலைதளத்தில் உதவிக்கோரிய இளைஞருக்கு கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் நேரில் சென்று உதவினார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் ரோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் முஹம்மத் (34 வயது) சமீபத்தில் ஏற்பட்ட வாகனத்தில் விபத்தில், இரண்டு கால்களும் செயலிழந்து, அவருடைய முதுகுப் பகுதியில் அடிபட்டு எலும்பு வெளியேத் தெரியக் கூடிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, முஹம்மத்தின் சிகிச்சைக்கு மருத்துவ உதவி தேவை என அவரது உறவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், புளி நசுக்கும் கூலி வேலை செய்து வரும் அவரது மனைவி, தினசரி வருமானத்தில் விபத்தால் முடக்கமடைந்த கணவரையும்,
வாடகைக்கூட செலுத்த முடியாத நிலையில் குடும்பத்தையும் நடத்தி வருகிறார். இந்த தகவலை அறிந்த கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்,முஹம்மத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு, மருத்துவ உதவிக்கு ₹25,000 வழங்கினார்.
மேலும், பிற உதவிகளை செய்யத் தயார் என்று உறுதியளித்தார். சமூக வலைதளத்தில் உதவி கேட்டு வந்த தகவல் அறிந்து இல்லம் தேடிச் சென்று உதவி செய்த பரிதா நவாப்க்கு முஹம்மத்துவின் குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.