தேன்கனிக்கோட்டை அருகே கோவில்களில் திருட்டு
தேன்கனிக்கோட்டை அருகே கிராம கோவில்களுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 12 சவரன் தங்க தாலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பாடி கிராமத்தில் ஸ்ரீபட்டாளம்மா ஸ்ரீமுத்தாலம்மா என்ற கிராம தேவதைகள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 8 சவரன் தங்க தாலி, தோடு உள்ளிட்ட தங்க நகைகளையும் கோயிலில் இருந்த அரை கிலோ எடையுள்ள வெள்ளி பொருள்களையும் திருடி சென்றனர். அதைப்போல இதே கிராமத்தில் அருகில் உள்ள வாங்காளம்மா என்ற கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க தாலி கால் கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இதேபோல அதே கிராமத்தில் விவசாயி முனிமாறன் (34) என்பவர் வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காலையில் இதுகுறித்து அறிந்த கிராம பொதுமக்கள் இந்த திருட்டு சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் என கூறப்படுகிறது. மணியம்பாடி, மேலூர், கிரியனப்பள்ளி, சம்மந்தகோட்டா, ஒட்டர் பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் உள்ள விவசாயிகளின் மின் மோட்டார்கள் பேனல் போர்டு மற்றும் மின் ஒயர்கள் ஆகியவற்றையும் அவ்வப்போது மர்ம நபர்கள் திருடி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.