மின்மாற்றியை மாற்றி முறையாக மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மின்மாற்றியை மாற்றி முறையாக மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-07-08 04:58 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு மின்விநியோகம் தரக்கூடிய குறைந்த மின் அழுத்தம் உள்ள மின்மாற்றியை அடிக்கடி மின்வாரியத்தினர் பழுது நீக்கி சீர் செய்து வந்தனர் இருப்பினும் பழுதடைந்த மின்மாற்றியால் கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வருகிறது போதிய மின்சாரம் இல்லாததால் மின்விளக்குகள் எரியாமலும், போன் சார்ஜர் கூட ஏற்ற முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். மேலும் நெசவுத்தொழில் செய்ய முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ற முடியாததால் குடிநீர் தட்டுப்பாடும் அப்பகுதியில் ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் எடுப்பட்டனர். உடனடி நடவடிக்கையாக புதிய மின்மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.