எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரி அம்மனை வழிபட்டனர்.
Update: 2024-04-23 03:09 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட மலர் மேடையில் நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பெண்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.