திருத்தணி அரசுக் கல்லூரி பேராசிரியை தற்கொலை
திருத்தணி அரசுக் கல்லூரி தற்காலிக பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருபவா் பாண்டியன் (35). இவரது மனைவி கனிமொழி (35). இவா் திருத்தணி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் தற்காலிகப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து அரக்கோணம் தீயணைப்பு நிலைய பணியாளா்கள் குடியிருப்புக்கு வந்த அவா், தனது வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு வீட்டின் உள்ளே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பேராசிரியை கனிமொழி பணிபுரிந்த கல்லூரியில் அவருக்கு ஏதேனும் பிரச்னையா, கணவருடன் பிரச்னையா, ஏன் அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.