திருவட்டார் ஒன்றிய பெண் கவுன்சிலர் முன்பு கணவர் மீது தாக்குதல்
திருவட்டார் ஒன்றிய பெண் கவுன்சிலர் முன்பு கணவர் மீது தாக்குதல் - எஸ்பி இடம் புகார்.
Update: 2024-03-14 07:04 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தின் 2-ம் வார்டு கவுன்சிலராக இருப்பவர் அனிதா குமாரி. திமுகவை சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரான வாழையத்துவயல் தேவாலயத்தில் டீக்கனராக பதவி வகித்து வருகிறேன். கடந்த 10-ம் தேதி தேவாலயத்தில் ஆராதனை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது, ஏழு பேர் கொண்ட கும்பல் கூட்டாக வந்து என்னிடம் தகராறு செய்ததுடன், என் கண் முன்பு எனது கணவரை தாக்கினர். நான் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்ததால் அந்த கும்பல் என்னையும், எனது கணவரை மிரட்டி விட்டு சென்றனர். ஆலய நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் சிலர் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. படுகாயம் அடைந்த எனது கணவர் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த பகுதி கீரிப்பாறை காவல் நிலையத்துக்கு உட்பட்டு வருவதால் இது தொடர்பாக அந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.