தொடர் மழையால் பொதட்டூரில் நெசவு பணிகள் பாதிப்பு

ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெசவு பணிகள் பாதிப்படைந்தன.

Update: 2024-07-02 02:24 GMT

நுாலை வெயிலில் உலர்த்தும் பணி

ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. நெசவு தொழிலில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். நுாலுக்கு பசை சேர்த்தல், பாவு தயார் செய்தல், கைத்தறி மற்றும் விசைத்தறி இயக்குதல், தறி பழுது பார்த்தல், அச்சு கோர்த்தல் என, நெசவு சார்ந்த பல்வேறு பணிகளும் இந்த பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், நுாலுக்கு பசை சேர்ப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தரமான பசையாக இருந்தால் மட்டுமே, அந்த நுால், தறியில் வலுவாக அச்சில் இசைந்து வரும். இதில், தண்ணீர் வளம் வாய்ந்த சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டையில் பசை சேர்க்கும் பணி அதிகளவில் நடந்து வருகிறது. பசை சேர்க்கப்பட்ட நுாலை வெயிலில் உலர்த்த வேண்டியது அவசியம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பசை சேர்க்கப்பட்ட நுாலை வெயிலில் உலர்த்தும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நெசவு தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News