விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி -- தொழிலாளர்களின் கவனக்குறைவால் தான் நடந்தது !

Update: 2025-01-04 09:34 GMT

விருதுநகர் 

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட காரண ங்களால் விபத்து நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் விருதுநகர் அருகே வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 84 அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 84 தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். பட்டாசு உற்பத்திக்கான ரசாயன பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை செய்யும் கோட்டை சுவர் அறை, வேதிப்பொருள் அறை உட்பட 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த விருதுநகர், சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபதில் குருந்தமடத்தை சேர்ந்த வேல்முருகன் (54), காமராஜ், செட்டிக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ் (37), வீரார்பட்டியை சேர்ந்த கண்ணன், அருப்புக்கோட்டையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம்(46), சிவக்குமார் (56) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதின் என்பவர் காயமடைந்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீஸார், போர்மேன்கள் பாண்டியராஜ் (23) பிரகாஷ் (27) ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரித்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

விதிமீறலால் விபத்து: விபத்து நடந்த சாய்நாத் பட்டாசு ஆலை உரிமம் பாலாஜி என்பவர் பெயரில் உள்ள நிலையில், விதிமீறி சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்து, மற்றொரு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சாய்நாத் பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கு அனுபவமில்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 பேர் மீது வழக்கு: இதற்கிடையில், ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெசோ அதிகாரிகள் ஆய்வு: சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலக கிளையின் முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கந்தசாமி தலைமையிலான பெசோ அதிகாரிகள் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் நேரில் ஆய்வு செய்து வேதிப்பொருள் மாதிரிகளை சேகரித்தனர். 

Tags:    

Similar News