ராசிபுரத்தில் ஏர் ஹாரன் பறிமுதல் - போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பஸ்கள், அரசு பேருந்து, வேன்கள் மற்றும் ஆட்டோகளில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் 'ஏர் ஹாரன்' கள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தலைமையில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, சுமார் 20 க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த 'ஏர் ஹாரன்' களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். மேலும் தனியார் பேருந்து ஒன்றை ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா பேசும் போது, இதுபோன்ற 'ஏர் ஹாரன்' கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நீங்கள் இதுபோன்ற 'ஏர் ஹாரன்' களை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பேருந்து ஓட்டுநர் இந்த 'ஏர் ஹாரன்' கள் அடித்தும் பொதுமக்கள் வழி விடுவதில்லை என முன்னுக்கு பின் முரண்பான பதில் அளித்தார். தொடர்ந்து அவர் பேசியதால், கோபம் கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் உனது வாகன உரிமம் கொடு என கேட்டு அதற்கு அபராதம் கட்டு என கூறிச் சென்றார்.
மேலும், மீண்டும் 'ஏர் ஹாரன்' கள் பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியவரை எச்சரித்து அனுப்பினர். பஸ் நிலையத்தில் ஆய்வு நடைபெற்றுவதை அறிந்த ஒரு சில தனியார் பேருந்துகள் பஸ் நிலையம் உள்ளே வராமல் பஸ்ஸை வேறு பாதையில் ஓட்டிச் சென்றனர்.